துரையில் எல்.ஐ.சி. அலுவலகத்தில் உயரதிகாரி மீது தீவைத்து எரித்துவிட்டு, தீ விபத்துபோல் சித்தரித்து ஏமாற்றிய நிர்வாக அதிகாரி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Advertisment

மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியிலுள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி, இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியிலிருந்த பெண் முதுநிலை கிளை மேலாளரான கல்யாணி நம்பி என்பவர், தீயில் உடல் கருகி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த தீ விபத்தில் உதவி நிர்வாக அதிகாரியான ராம் என்பவருக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏ.சி. மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர் 

Advertisment

இதனிடையே, தீ விபத்தில் இறந்த எல்.ஐ.சி. மேலாளர் கல்யாணி நம்பியின் மகன் லட்சுமி நாராயணன், தனது தாயாரின் உயிரிழப்பில் சந்தேகமிருப்பதாக திலகர் திடல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரில், "உயிரிழப்பதற்கு முன் தனது அம்மா செல்போனில் தொடர்புகொண்டு பதற்றத்தோடு, "போலீசுக்கு போன் பண்ணு' என்று சொன்ன பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில், எல்.ஐ.சி. அலுவல கத்துக்கு செல்ல, அங்கே அலுவலகமே தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அம்மாவை கடைசியில், முழுவதுமாக எரிந்த நிலையில் சடலமாகத்தான் பார்த்தோம். சாவில் சந்தேகம் இருக்கிறது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் அலுவலகத்திலும், அருகிலுள்ள பகுதிகளிலும் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வுசெய்த திலகர் திடல் காவல்நிலைய போலீசார், ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லையென்று முத-ல் தெரிவித்தனர். 

தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்றுவந்த நிர்வாக அதிகாரி ராமிடம், கடந்த டிசம்பர் 19ஆம் தேதி பேச முற்பட்டபோது போலீசார் தடுத் தனர். அதையடுத்து, இறந்த மேலாளர் கல்யாணி நம்பியின் மகன் நாராயணனை தொடர்புகொண் டால்... அவரோ, "எதுவானாலும் போலீசிடம் கேட்டுக்கொள்ளுங்கள், எங்களை தொந்தரவு செய்யவேண்டாமென'க் கூறிவிட்டார். 

Advertisment

இந்நிலையில், கடந்த ஜனவரி 20ஆம் தேதி, மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த  ராமிடம் மாஜிஸ்திரேட் நேரடியாக சென்று விசாரணை நடத்திய பின், நடந்தது விபத்தல்ல கொலையென்றும், நிர்வாக அதிகாரி ராம் கைது செய்யப்படுவாரென்று தகவல் கசிய... போலீசாரிடம் விசாரித்தோம். 

lic=manager1

தீ விபத்து நடந்த அலுவலகத்தில் ஒரு பெட்ரோல் கேனை போலீசார்  கண்டெடுத் துள்ளனர். மருத்துவ ரிப்போர்ட்டில் ராம் மீது பெட்ரோல் பட்டு தீ விபத்தில் காயமடைந்ததாக தெரிவிக்க, மின்கசிவு எனக் கூறப்பட்டதில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதை யடுத்து, ராமை தீவிரமாக விசாரிக்க, ராம் அனைத் தையும் ஒன்றுவிடாமல் கொட்டிவிட்டார்.

அதன்படி, உயிரிழந்த பெண் முதுநிலை மேலாளரான கல்யாணி நம்பி, கடந்த ஆண்டு மே மாதம், திருநெல்வேலியிலிருந்து பதவி உயர்வு பெற்று மதுரைக்கு வந்துள்ளார். அதே அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ராம், அவர் தொடர்பான சில ஆவணங்களில் குளறுபடி, முறைகேடு செய்திருப்பதை கல்யாணி கண்டுபிடித்து விசாரணை நடத்தியிருக்கிறார். இதனால் சில மாதங்களாக மன உளைச்சலிலிருந்த ராம், இதிலிருந்து தப்புவதற்கு, சம்பந்தப்பட்ட ஆவணங்களை எரித்துவிட முடிவு செய்திருக் கிறார். அலுவலகத்திலுள்ள தீயணைப்பு கருவிகளையும், சி.சி.டி.வி. கேமராக்களையும் செயலிழக்க செய்வது குறித்து சிலரிடம் ஆலோசித்துள்ளார். 17ஆம் தேதிக்கு இரு நாட்கள் முன்பே பெட்ரோலை வாங்கிவந்து அலுவலகத்தில் ஒளித்துவைத்துள்ளார். 

சம்பவத்தன்று பெட்ரோலை ஊற்றி ஆவணங்களை எரிக்க முயன்ற போது தற்செய லாக, வேறொரு அறையிலிருந்த முதுநிலை மேலா ளர் கல்யாணி நம்பி, அலுவல கத்தின் இரண் டாம் தளத்திற்கு வர, ராம் செய்த செயலைப் பார்த்து கோபத் தில் கேள்வியெழுப்பியிருக்கிறார். ஆவணங் களை எரிக்கவிடாமல் தடுக்க நடந்த தள்ளுமுள்ளு போராட்டத்தில் சட்டென சுதாரித்த ராம், ஆவணங்களுக்கு தீ வைத்ததோடு, கல்யாணி நம்பியையும் அதே அறைக்குள் தள்ளிவிட்டு வெளியேறி அறையை இழுத்துப் பூட்டியிருக்கிறார். 

இந்த நேரத்தில்தான் கல்யாணி நம்பி அவரது மகனுக்கு செல்போன் மூலமாக பேசி "காவல்துறையினரை வரச்சொல்' எனக் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ராம், கல்யாணியின் மீதும் பெட்ரோலை ஊற்றி, அவர் மீதும் தீயை பற்றவைத்திருக்கிறார். பெட்ரோலில் நனைந்த கல்யாணியின் உடல் முழுக்க பற்றியெரிய, அதே பெட்ரோல் ராம்  காலிலும் சிறிதளவு நனைத்திருந்ததால் ராமின் காலில் தீ பற்றியது. உடனே அங்கிருந்து வெளியில் ஓடிவந்திருக்கிறார் ராம். தீ இரண்டாவது தளத்தில் பெருமளவு பரவத்தொடங்க, அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்களும், காவலாளியும் இரண்டாவது தளத்துக்கு சென்று, தீக்காயம் பட்டிருந்த ராமை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்கு அனுப்பியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தீ விபத்து என்றிருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார், உதவி நிர்வாக அதிகாரி ராமை கைதுசெய்தனர். 

தனது தவறுகளை கண்டித்ததற்காக, உயரதிகாரியை தீவைத்து எரித்து கொலை செய்த சம்பவத்தால் மதுரையே பரபரப்பிலிருக்கிறது!